சமீபத்தில் அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் "மரி ஸ்மித் ஜோன்ஸ்" என்பவர் இறந்துவிட்டார். ஒன்பது பிள்ளைக்கு தாயான இவர் இறக்கும் போது வயது 89. அவருடைய இறப்பு பலருக்கு துயரத்தைக் கொடுத்துள்ளது. அவருடைய இழப்பு யாராலுமே ஈடு செய்ய முடியாதது. ஏனெனில் பழங்குடி இனத்தை சேர்ந்த மரி ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்க்கொண்டவர்.
ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாகப் பார்க்கபடுவதற்க்கு காரணம் என்ன? மரி ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடன் கொண்டு சென்றுவிட்டார். அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "யக்" மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவருக்கு பின் ஒருவருக்கும் அந்த மொழியை பேசத் தெரியாது!
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒன்று அழிந்துவிட்டது. மரி ஸ்மித்திற்க்கு ஒன்பது வாரிசுகள் இருந்தும், யாரும் "யக்" மொழியை படிக்க ஆர்வம் காட்டவில்லை. அனைவரைப் போல "ஆங்கிலம்" பேசுவதே நாகரீகமெனக் கருதி இருந்துவிட்டனரொ என்னவோ? "யக்" மொழிப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப்போகிறோமென மேரி ஸ்மித்திற்கு தெரிந்திருந்ததா என்பது தெரியவில்லை!
"யக்" மொழி பேசத் தெரிந்த மரி ஸ்மித்திற்கு ஒரு சகோதரி 1993ல் இறந்து விட்டார். அதன் பிறகு மரி ஸ்மித்தோடு "யக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "யக்" மொழி அழியாமல் இருப்பதற்கு மரி ஸ்மித் சில முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். ஒரு மொழியியல் வல்லுநர் உதவியோடு "யக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாரவது இந்த நூல்களின் உதவியோடு "யக்" மொழியை கற்று பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீதும் உயிர் பெறும்.
"யக்" மொழிக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலை இதுதான்! இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகில் வழக்காடப்படுகின்ற ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மரி ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசபடுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. உலகெங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிகின்றதே அன்றி குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற போது அந்த இனத்தின் பண்பாடும் அழிகின்றது. அவ்வாறு அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை, பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்காடப்பட்ட மிக பழமையான மொழிகள் தான். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெறும் பகுதி புதைந்துவிடுகின்றது. வரலாற்று உண்மைகளும் அழிந்துவிடுகின்றது. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்கள் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு பிறகு அது அறுநூறாக மட்டுமே மிஞ்சி நிற்கும். இது மொழியியல் வல்லுனர்களின் எச்சரிக்கை. இன்றைக்கு பேசபடுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகின்றனர். ஐநூறு மொழிகளை வெறும் பத்து பேர்தான் பேசுகின்றனர்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசபடுகின்ற இருபது மொழிகளில் தமிழும் ஒன்று என்பது நமக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. கல்வெட்டிலிருந்து கணினி வரை தமிழ் பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி! ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஒரு மொழிக்குள் மற்ற மொழிகளின் ஊடுருவலும், ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் இருகின்றது. வட்டார பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கிறது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தை கொடுக்கின்றது. தமிழ்நாட்டின் சென்னை போன்ற பெருநகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்!!!
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறரை கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் தமிழும் ஒன்று என சில ஆண்டுகளாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது நினைவிருக்கலாம். ஆனால் முப்பது ஆண்டுகளில் தமிழ் அழியும் என்பது ஏற்புடையதில்லை. அதேவேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்கமுடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடகூடிய ஒன்று தான். மொழி அழிவதற்கும் தேவையான மற்றைய காரணங்கள் தமிழில் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. ஆகவே தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்க வேண்டுமென ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் நினைக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழ் நீண்ட காலத்திற்கு நிலைக்கச் செய்யும். இல்லையெனில் "அழிந்து போன மொழி பட்டியலில்" தமிழ் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும். மரி ஸ்மித் ஜோன்ஸ் உடலோடு "யக்" மொழியும் பதைக்கபட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்ல கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்...
தலை நிமிர்ந்து நிற்போம்...
அழியப் போகும் மொழிப்பட்டியலில் தமிழ்?
Posted by Dubakoor
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
எமது பதிவை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி
http://renikunda.blogspot.com/2010/05/blog-post_18.html
Post a Comment