காட்ட அழிச்சவன, காவு கொண்டு போகாதோ?

'காட்ட ஆழிச்சதாரு
காலமழை மறிச்சதாரு
பூமியெல்லாம் பத்தியெரிய - எங்க
பொழப்ப கெடுத்ததாரு

காட்ட அழிச்சவன
காவு கொண்டு போகாதோ
மரத்த முறிச்சவன
மண்மூடிப் போகாதோ'

- பழங்குடி மக்களின் இந்த சாபகுரல் எப்போதும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எவரும் காது கொடுத்து கேட்பதில்லை!!!

காட்டு மரங்கள்!!!


இமயமலைச் சிகரத்தை இந்தியாவின் கூரை என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். அந்த இமயமலைக்கு அடுத்தபடியாக உன்னத மலைச் சிகரங்களால் பொலிவுறும் மலைத்தொடர், நமது தென்கோடியில் உள்ள நீலகிரி ஆனைமலைத் தொடர்தான். இந்தமலைச் சரிவின் மரசெறிவும், புள் தரைச் செறிவும் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் நமக்கு மழை வளம் இருக்கும். அதை உணராமல் மரங்களையும் காடுகளையும் அழித்து இயற்கையை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையின் கொடையான மலை களை நாம் மெள்ள மெள்ள இழக்கத் தொடங்கிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியான உண்மையை நாம் உணர ஆரம்பித்தது சில ஆண்டுக்களுக்கு முன்பே! மழைகாலங்களில் மண் சரிவு என்பது தற்போது வாடிக்கையான ஒன்று! இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று நிலவியல் நிபுணர்களிடம் வினவ வேண்டிய அவசியமே இல்லாமல் கூறலாம் 'காட்டை அழித்ததுதான் காரணமென்று!'

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மலையில் நில வெடிப்பு ஏற்பட்டது. பழனி மலையிலிருந்து கொடைக்கானல் போகிற வழியிலும், பெருமாள் மலையிலும் கூட நில வெடிப்புகள் ஏற்பட்டன. மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் நூறு அடி ஆழம் அளவிலான நில வெடிப்பு.

வெளியிலிருந்து பார்க்கத்தான் மனம்கவரும் மலைப்பிரதேசமாகத் தெரிகின்றது நீலகிரி. ஆனால், உள்ளுக்குள் அது வெம்பிக் போயிருப்பது, மரத்துப் போன இதயங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் நுரையீரல் என்று சொல்லபடுகின்ற நீலகிரியின் பசுமை கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகம் மழைப் பெய்யும் பகுதியான தோவாளை இங்கேதான் இருக்கிறது என்ற பெருமை வேறு. அப்படிப்பட்ட மலைப்பகுதி இன்று சிதைந்து சீரழிந்து கிடக்கிறது என்பது வேதனையான உண்மை!

பொதுவாக தமிழ்நாட்டு மரங்கள் வெட்டப்பட்டு கேரளாவுக்குக் கடத்தபடுவது இன்று நேற்றல்ல... இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே! ஓவேலி பகுதியில் காடு இருந்ததற்கான சுவடே இல்லாமல் மழிக்கப்பட்டு, அங்கே தேயிலை பயிரிடப்பட்டுவிட்டது. இப்படிப் பணப் பயிர்களை விளைவிப்பதற்காக, விலை மதிப்பற்ற காடுகளை இழந்துகொண்டிருக்கிறோம் என்ற சொரணையே யாருக்கும் வரவில்லை.

ஊட்டியின் அழகே அதன் புல்வெளிகள்தான். ஸ்கூல்மந்து பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இயற்கை புல்வெளிகள் அமைந்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையைக் கொண்டிருந்தது. இன்று அந்த புல்வெளிகள் யாவும் கட்டடங்களாகவும், தேயிலை தோட்டங்களாகவும் ஆகிவிட்டன.

காடுகளை அழிப்பதால் மண் தன பிடிமானத்தை இழக்கிறது. சுமார் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் நீலகிரி மலைச்சரிவில் இருநூறு பேர் இறந்த போதே நாம் உஷாராகி இருக்க வேண்டும். செய்தோமா? இல்லையே? அதன் பின்பு தான் தோட்டங்களும் விடுதிகளும் அதிகமாயின. கட்டடங்கள் கட்டுவதையும், தேயிலை தோட்டங்கள் விரிவாக்க படுவதையும் தடை செய்யவேண்டும் என்று ஆராச்சியாளர்கள் குழு, அறிக்கைதான் கொடுக்கமுடியும். அதை நடைமுறைப் படுத்த வேண்டியது அரசாங்கம்தானே!

மழை, மண், மரம் என ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இயற்கை. அதில் ஒரு சிறு கல்லை அசைத்தாலும் இயற்கையின் முழு அமைப்பும் கெட்டுப்போகும். மலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அங்குள்ள மரங்களை வெட்டினால், நீர் ஊற்றுக் கண்கள் அடைபடும். நிலத்தடி நீர் நிலைகள் வறண்டு போகும். இதனால் ஆறுகள் கலங்கிச் செந்நீராகும். எல்லாவற்றிக்கும் மேலாக மண்ணையே இழக்க வேண்டிவரும்.

மரத்தின் சுவாசக்காற்று தன்மீது படும்போது மனிதன் புத்துணர்ச்சி பெறுகிறான். ஆனால், மனிதனின் மூச்சுக்காற்று மரங்கள் மீது படும்போது அவைக் கருகி சாகின்றன. இயற்கை நில அமைப்பை மலைப்பகுதி, சமவெளிப்பகுதி என்று பிரிப்பார்கள். போகிறப் போக்கை பார்த்தால், சமவெளிப்பகுதிகளே அதிகமாகி மலைப்பகுதிகள் என்பது வெறும் கனவாக, பழங்கதையாக மாறிப் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது!

ஆரம்ப கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன...

'காட்ட அழிச்சவன
காவு கொண்டு போகாதோ...'

0 comments:

Post a Comment