திருநெல்வேலி - சிந்துப்பூந்துறையில் சில அதிசயங்கள்

Imageபெட்டர் போட்டோகிராபி என்ற பெயரில் ஆங்கில மாத இதழ் ஒன்று வெளிவருகிறது. புகைப்படம் குறித்த அனைத்து செய்திகளும் அதில் இடம் பெறுவதுடன் உலகப் புகழ்ப்பெற்ற புகைப்படங்களும் பரிசுகள்/விருதுகள் பெற்ற புகைப்படங்களும் ஒவ்வொரு மாதமும் இதழை அலங்கரிக்கின்றன. வள வள தாளில் வண்ணங்களில் அச்சில் வெளிவருவதும் புகைப்படதொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பயன்படும் வகையில் உலக அரங்கில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களை அறிந்திடும் வகையில் பக்கத்திற்கு பக்கம் காமிராக்களும் லென்ஸ்களுமாக ஒளிக்கற்றைகள் ஒற்றைப் புள்ளியில் குவிகின்றன. தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக பெட்டர் போட்டோகிராபி இதழை அதில் வெளிவரும் புகைப்படங்களுக்காக மணிக்கணக்கில் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு ரசிக்கும் அனுபவமும் வாய்ப்பும் எனக்கிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் எந்தப் புகைப்படமும் ஏற்படுத்தாத உள்ளக் கிளர்ச்சியை சிந்துப் பூந்துறையில் நான் 06/5/2010-ல் கண்ட கருப்பும் வெள்ளையுமான புகைப்படங்கள் ஏற்படுத்தின.

புகைப்படக்கலைஞர் அ.இசக்கி என்ற 85+ முதியவர் இன்று தன் வாழ்நாளில் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். நெல்லைச்சீமையைத் தாண்டாத மனிதர். அவர் என்னமாதிரியான காமிராவை பயன்படுத்தினார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய வயதையும் வாழ்விடத்தையும் கணக்கில் கொண்டால் இன்றைக்கு இருக்கும் எவ்விதமானதொழில்நுட்ப வசதிகளும் இல்லாத ஒரு காமிராவைக் கொண்டு அவர் செய்திருக்கும் அற்புதங்கள்... கண்களை ஈரமாக்கியது. இப்போது நினைத்தாலும் அந்த முகங்கள், மனிதர்கள்,வாழ்க்கை, அவர்களுடைய வாழ்க்கையின் தருணங்கள், மலை, மரம், செடி, கொடி, மாடு.. பேசும் கண்கள்.. அதிலும் வாசல் அருகில் நம்மை வரவேற்கும் அந்த கிராமத்துப் பெண்ணின்புன்னகையும் கண்களும் இயற்கை அழகின் உச்சம்.. நெல்லையில் எப்போதாவது ஒரு சில வினாடிகள் மட்டுமே காணக்கிடைக்கும் மேகம் சூழ்ந்த இயற்கைப் பின்னணியில் சில காட்சிகள், குடத்திலும் தலையிலும் தண்ணீர்க்குடத்துடன் நடக்கும் என் தாய்மார்கள், குடைவண்டிகள், மரநிழல்களில் இளைப்பாறும் மனிதர்களும் விலங்குகளும் காளை மாடுகளுக்கு லாடம் அடிக்கும் காட்சி, சேவல் சாமிக்கோவில் கொடை, எப்போதாவது ஊருக்குள் வரும் மலைச்சாதி மக்கள், மரநிழலில் பொதிந்திருக்கும் மனிதர்களின் கடந்த காலத்தை மவுனமாக வாசித்துக் கொண்டிருக்கும் குளம், குட்டைகள்... சரிந்துக்கிடக்கும் மரத்தில் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் காக்கை குருவிகள்.... புகைப்படக் காட்சிகள் அனைத்திலும் இருப்பவர்கள் என் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை. மருதமும் முல்லையும் மயங்கிய நெல்லையில் அந்த மண்ணுக்கும் மனிதர்களுக்குமான கருப் பொருட்களும் உரிப்பொருட்களும். அவர்கள் படைத்துக் கொண்ட அவர்களுக்கான தெய்வங்கள். வழிபாடுகள்... மாற்றங்களைத் தவிர்க்க முடியாது என்று அறிந்திருந்தாலும் அந்தப் புகைப்படக்காட்சிகளில் சில இன்றைக்கு ஆவணமாகிவிட்டதால் மனசோரம் சின்னதாக முள் தைக்கத்தான் செய்தது. அந்த முள்ளை எடுத்து ஏனோ தூர எறிய விருப்பமில்லை.

Image

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த திரைப்படக் கலைஞர் பாலுமகேந்திரா அவர்கள் தன்னுடைய காமிராவை கீழே வைத்துவிட்டு மனம் நெகிழ்ந்துப் போனதாக நண்பர் கிருஷி சொன்னார்.

அந்த நிமிடத்தில் கிருஷி அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் அழ வேண்டும் போலிருந்தது. அப்போது தான் கிருஷ் அவர்களைச் சந்திக்கிறேன், முதல் முறையாக.

என் செய்கை அவருக்குப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டால்.....!

ஏன் கண்ணீர் வந்தது? சந்தோஷத்தில் மட்டுமா.. இல்லை.

வெளியில் தெரியாமல் இப்படி எத்தனை எத்தனையோ "இசக்கி"கள்!

பெட்டர் போட்டோகிராபிக் பக்கங்களுக்கு எந்த வகையிலும் குறையாத இசக்கியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. கருப்பும் வெள்ளையுமாய் வெயில் காயும் நதிக்கரையில் மர நிழல்களுக்கடியில் தலைசாய்த்து படுத்துறங்கும் விழுதுகளின் உயிர்மூச்சு. நன்றி வாழ்த்துகள் என்று வார்த்தைகளுக்குள் கிருஷ் அவர்களின் இந்தப் புகைப்பட தொகுப்பு முயற்சியை கை குலுக்கி விடை சொல்ல முடியவில்லை. அ.இசக்கி என்ற மண்ணின் கலைஞனை மக்களுக்கு அறிமுகம் செய்த கிருஷி புத்தா கலை பண்பாட்டு ஆய்வு மையம் என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலமே இதையும் செய்திருக்கிறார் என்பது சிந்துப்பூந்துறையில் இரண்டாவது அதிசயம்.

KRISHI
Buddhaa Cultural Research Centre
14, C/21 East Street
Sindupoondurai,
Tirunelvelli 627 001
Tamil nadu


அதிகாலை-யில் இருந்து சுட்டவை

0 comments:

Post a Comment